டிரெண்டிங்

தவறுக்கு வக்காலத்து வாங்கலாமா - ரஜினிக்கு நமது அம்மா நாளிதழ் கேள்வி

rajakannan

தணிக்கைச் சான்றை சுட்டிக்காட்டி ஒரு தவறுக்கு வக்காலத்து வாங்கலாமா என சர்கார் பட விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு நமது அம்மா நாளிதழ் கேள்வி எழுப்பியுள்ளது.

‘சர்கார்’ படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்களை விமர்சிப்பது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சை காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். தியேட்டர் முன் இருந்த விஜய்யின் பேனர்களை கிழித்தனர். போராட்டம் காரணமாக பல திரையரங்குகளில் ‘சர்கார்’ காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. 

அதிமுகவினரின் இந்த போராட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஜினி காந்த், கமல்ஹாசன், விஷால், சீனுராமசாமி, பா.ரஞ்சித், ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்தனர். தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு, அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும், படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் எனவும் இத்தகைய செயல்களை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், தணிக்கைச் சான்றை சுட்டிக்காட்டி ஒரு தவறுக்கு வக்காலத்து வாங்கலாமா என ரஜினிகாந்துக்கு நமது அம்மா நாளிதழ் கேள்வி எழுப்பியுள்ளது. தணிக்கை செய்யப்பட்ட படத்தை எதிர்த்து போராடுவது சட்டத்துக்கு புறம்பான செயல் என ரஜினி தெரிவித்த கருத்து குறித்து நமது அம்மா நாளிதழில் கட்டுரை வெளியாகி உள்ளது. 

அதில் அரசுக்கு எதிராக உள்நோக்கத்தோடு மோசமான கருத்தை சினிமா மூலம் பரப்பினால் அதனை தடுத்து நிறுத்ததானே வேண்டும் எனவும், அரசுக்கு எதிராக கண் சிவக்க வசனம் பேசினால் மட்டுமே எதிர்காலத்தில் முதலமைச்சராகிவிடலாம் என்ற கனவில் இருக்கும் நடிகர் விஜய்க்கும், புரிதலின்றி அரசுக்கு ஆலோசனை சொல்லும் இயக்குநர் முருகதாசுக்கும் தான் ரஜினிகாந்த் அறிவுரை கூற வேண்டும் என நமது அம்மா நாளிதழ் கூறியுள்ளது.