காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் போக்கைக் கண்டித்து ஆளும் அதிமுகவின் நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழில் கவிதை வடிவில் விமர்சனம் வெளியாகியுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள கவிதையில் ஒரு கண்ணில் வெண்ணெய், ஒருகண்ணில் சுண்ணாம்பு என தாய் காட்டும் அன்பில் தடுமாற்றம் இருக்கலாமா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. வாக்குகளை மனதில் வைத்து வஞ்சகம் புரியலாமா என்றும், தேர்தல் முடிவை வைத்து தீர்ப்புகளை கிடப்பிலிட்டு திரியலாமா என்றும் கேட்கப்பட்டுள்ளது.
கர்நாடகத் தேர்தலை காரணமாகக் காட்டி காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்திற்கு துரோகம் இழைப்பதாக சூசகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்நாடு என்று இந்தியாவை அழைப்பது அனைத்து மாநில மக்களையும் சமமாக நடத்துகிற சத்தியத்தில் நிலைக்க வேண்டும் என்பதால்தானே என்று கேட்டுள்ள ஆளும் கட்சியின் நாளிதழ், அது மொத்தமும் பொய்ப்பதா அதை மோடி அரசு முன்னின்று சிதைப்பதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.