ஆர்.கே.நகரில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுவதாகவும், தங்களுக்கு போட்டி யாருமில்லை என்றும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், கடந்த முறை போட்டியிட்ட கலைக்கோட்டுதயம் அதே இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிடுகிறார் என்று கூறினார். மேலும் அவர் பேசும் போது, “அரசியல் கட்சிகள் எங்கெல்லாம் தேர்தல் அலுவலகங்கள் போடுகின்றதோ அங்கெல்லாம் கண்காணிப்பு கேமிராக்கள் அமைத்து துணை ராணுவ படையினரை அமர்த்த வேண்டும். பணம் கொடுப்பது, வாங்குவதை தடுக்க வேண்டும் என்று நினைத்தால் தேர்தல் ஆணையத்தால் முடியும். பணம் கொடுக்கும் போது வாங்கும் போது சிலரை கைது செய்து சிறையில் அடைத்தால் அந்த குற்றச் செயல் குறைந்துவிடும்.
அதனைவிடுத்து சாலையில் நின்று கொண்டு, பொதுமக்களை மறித்து அவர்களிடம் இருந்து வியாபாரம் செய்ய, மருத்துவத்திற்கு வைத்திருக்கும் பணத்தை பறிமுதல் செய்வது சரியல்ல. கடந்த தேர்தலில் 89 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையமே கூறியுள்ளது. பணப்பட்டுவாடா செய்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?. ஜனநாயகத்தை பணநாயகமாக மாற்றிவிட்டனர். பணப்பட்டுவாடாவை தடுக்காவிடில் தேர்தல் நடத்துவதே வீண். வீடுவீடாக சென்று வாக்கு கேட்கும் முறை ஒழிக்கப்படும் வரை பணப்பட்டுவாடாவை ஒழிக்க முடியாது. மாலை 5 மணிக்கு மேல் பொதுக்கூட்டம் நடத்த தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும். அப்பொழுது தான் எங்களது கொள்கைகளை விளக்கி கூறமுடியும்.
இந்த முறையும் பணப்பட்டுவாடா நடைபெற்றால் ஜனநாயகத்தின் மீது பற்றுள்ளவர்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள். எங்களுக்கு போட்டியாக யாரையும் பார்க்கவில்லை. எங்களுடைய தனித்த தத்துவம் தனித்த அரசியல். இதுவரைக்கும் இந்த மண்ணில் உள்ள மொத்த அரசியலையும் மாற்றி மாற்று அரசியல் படைக்க நினைக்கிறோம். ஊழல், பசி, பட்டினி இல்லாத தேசத்தை உருவாக்க நாம் தமிழர் கட்சி முயற்சிக்கிறது” என்றார்.