இலங்கையில் வாழும் இஸ்லாமியத் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், இலங்கையில் தமிழர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்ட அரசு தற்போது இஸ்லாமியத் தமிழர்களையும் தாக்கத் தொடங்கியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது எனக் கூறியுள்ளார். அம்பாறையிலுள்ள ஒரு உணவகத்தில் தொடங்கிய இந்த வன்முறை வெறியாட்டம், பள்ளிவாசல், கடைகள் என இஸ்லாமியர்களின் உடைமைகளைச் சேதப்படுத்தி மாபெரும் கலவரமாக உருவெடுத்துள்ளது என சீமான் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், புத்தபிக்குகள் தலைமையில் மீண்டும் ஒரு இனக் கலவரத்தை இலங்கை அரசு உண்டாக்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுபோன்ற தாக்குதலுக்கு எதிராக இந்திய அரசும், சர்வதேசச் சமூகமும் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து, கலவரக்காரர்களைக் கைது செய்து, இஸ்லாமியத் தமிழர்களின் பாதுகாப்பான வாழ்க்கையை உறுதிப்படுத்த வேண்டுமென்று சீமான் தமது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.