ஆண்டிபட்டி அருகே உள்ள தேனி அரசுமருத்துவக்கல்லூரி முன்புறமுள்ள தேநீர்கடைக்கு அதிகாலையில் காரில் வந்த மர்மநபர்கள் உணவுப்பொருட்களை திருடிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு எதிரே முத்தனம்பட்டியைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் தேநீர் கடை வைத்துள்ளார். வியாபாரத்தை முடித்துவிட்டு நேற்று இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
இந்நிலையில் இன்று அதிகாலை காரில் வந்த 4 மர்ம நபர்கள் இவரது கடையில் இருந்த உணவுப்பொருட்களை திருடிச் சென்றனர். இதையறியாது .காலையில் பாண்டியன் கடைக்கு வந்து பார்த்த போது அங்கிருந்த தண்ணீர்பாட்டில், கடலைமிட்டாய், பிஸ்கட் பாக்கெட், முட்டை உள்ளிட்ட தின்பண்டங்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து பாண்டியன், கானாவிலக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் பாண்டியனின் கடையில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, அதிகாலையில் காரில்வந்த 4 மர்ம நபர்கள் பொருட்களை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து மர்ம நபர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் காரில்வந்த மர்மநபர்கள் உணவுப்பொருட்களை திருடிச்சென்ற சம்பவம் ஆண்டிபட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது