குமரியில் ஊராட்சி ஒன்றிய உறுப்பினரின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு தலைமறைவான கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பி அருகே செட்டிச்சார்விளை பகுதியை சேர்ந்தவர் சகாய ஆன்றனி. திருவட்டார் ஊராட்சி ஒன்றிய 9வது வார்டு உறுப்பினராக இவருக்கு சொந்தமாக செட்டிச்சார்விளையில் இரும்புகடை உள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு சுமார் 9 மணியளவில் சகாய ஆன்றனி, தன் கடையை பூட்டி விட்டு இருசக்கர வாகனத்தில் அருகில் உள்ள தன்வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அருகிலுள்ள வாழைதோப்புக்குள் மறைந்திருந்த மர்ம கும்பல் பின்புறமாகச் சென்று சகாய ஆன்றனியின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை அப்பகுதி வழியாக சென்றவர்கள் மீட்டு மார்த்தாண்டத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து திருவட்டார் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை வலைவீசி தேடிவருகின்றனர்.