சுதந்திர போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவரின் 111வது பிறந்தநாள் விழா முன்னிட்டு முதலமைச்சர் பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 111ஆவது பிறந்தநாள் விழா மற்றும் 56ஆவது குருபூஜை விழா இன்று நடைபெறுகிறது. அதனையொட்டி மதுரை கோரிப்பாளையத்திலுள்ள தேவர் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அங்கிருந்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னிலுள்ள தேவர் நினைவிடத்திற்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் சென்றனர். அங்கு, தங்கக்கவசத்தால் அலங்கரிக்கப்பட்ட தேவரின் திருவுருவ சிலைக்கு மலர்த்தூவியும், மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினர்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்தவர் என முத்துராமலிங்க தேவருக்கு புகழாரம் சூட்டினார். முத்துராமலிங்க தேவரின் பிறந்த நாளை அதிமுக அரசு சிறப்பாக கொண்டாடி வருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். அமைச்சர்கள் விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன், ராஜேந்திர பாலாஜி, மணிகண்டன், ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோரும் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜையில் பங்கேற்பதற்காக சென்ற ஸ்டாலின், மதுரை கோரிப்பாளையத்திலுள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனையடுத்து பசும்பொன் சென்ற மு.க.ஸ்டாலின் தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். முத்துராமலிங்க தேவரின் லட்சியத்தின்படி திமுக செயல்படும் என ஸ்டாலின் தெரிவித்தார்.