காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் துணைத் தலைவரிடம் வழங்க உள்ளதாக தெரிவித்த அதிமுக எம்.பி முத்துக்கருப்பன் 3 மணி நேரத்திற்குள் தனது முடிவினை மாற்றிக் கொண்டார்.
ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அளித்த கெடு மார்ச் 29-ம் தேதியுடன் முடிந்தும், மத்திய அரசு இன்னும் ஆணையத்தை அமைக்கவில்லை. இதனையடுத்து மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடுத்தது. உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தக் கோரி தமிழக அரசு மற்றும் அனைத்துக் கட்சிகளும் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக்கோரி திமுக உள்ளிட்ட கட்சிகளும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதனிடையே காவிரி விவகாரத்தில் பதவி விலகத் தயாராக இருப்பதாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முத்துக்கருப்பன் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்தார். மக்களுக்கு எதுவும் செய்ய முடியாத போது பதவி ஒரு கேடா என்றும் கேள்வி எழுப்பினார். முதல்வரும், துணை முதல்வரும் தனக்கு சகோதரர்கள் போன்றவர்கள் என்றாலும், அவர்கள் பேசினாலும் ராஜினாமா முடிவில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என முத்துக்கருப்பன் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
அதன்படி தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் அளிப்பதற்காக டெல்லி சென்ற அதிமுக எம்.பி முத்துக்கருப்பன், தமிழகத்துக்கு தண்ணீர் கொடுப்பதில் செய்யப்படும் அநீதியை மனம் ஏற்கவில்லை என வருத்தமுடன் தெரிவித்தார். காவிரி விவகாரத்தில் கர்நாடக தேர்தலை மனதில் வைத்தே மத்திய அரசு காலம் தாழ்த்துவதாக விமர்சித்த அவர், கடுமையான சட்டப்போராட்டங்களுக்குப் பிறகு தீர்ப்பு கிடைத்த பிறகும் தாமதப்படுத்துகின்றனர் என சாடினார். முதலமைச்சர், துணை முதலமைச்சர் சமாதானம் செய்வார்கள் என்பதால் செல்ஃபோனை அணைத்து வைத்து விட்டதாகவும் கூறினார்.
ஆனால் இதனை தெரிவித்து சுமார் 3 மணி நேரங்களில் முத்துக்கருப்பன் தனது ராஜினாமா முடிவை மாற்றிக் கொண்டார். புதிய தலைமுறை செய்தியாளரிடம் பேசிய அவர், “ முதலமைச்சர், துணை முதலமைச்சர் கேட்டுக்கொண்டதன் பேரில் ராஜினாமா முடிவை தள்ளி வைக்கிறேன். முதலமைச்சர், துணை முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டாம் எனக் கேட்கும் போது அதற்கு நான் மரியாதை தர வேண்டாமா...? உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, தமிழகத்திற்கு உண்டான தண்ணீர் நிச்சயம் கிடைக்கும் என சொல்லியுள்ளார். எனவே ராஜினாமா முடிவை தள்ளி வைக்கிறேன்” என தெரிவித்துவிட்டார்.