முஸ்லிம்கள், தலித்துகள் மீது அண்மைக்காலமாக நடைபெற்று வரும் தாக்குதல்கள் தொடர்பாக மத்திய அரசு என்ன நடவடிக்கையை எடுத்தது என மக்களவையில் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
முஸ்லிம்கள், தலித்துகளுக்கு எதிராக தாக்குதல்களை நடத்த விஸ்வ ஹி்ந்து பரிஷத், பஜ்ரங் தள், பசு பாதுகாப்பு அமைப்புகளை மத்திய அரசு மறைமுகமாக ஊக்குவித்து வருவதாகவும் கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.
இன்று மக்களவையில் பேசிய மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, கேரளாவில் ஒரே ஒரு ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் இறந்ததற்கு உள்துறை அமைச்சர், அம்மாநில முதலமைச்சருக்கே தொலைபேசியில் அழைத்து விளக்கம் கேட்கிறார். நாடு முழுவதும் பசுப்பாதுகாப்பு என்ற பெயரில் எண்ணற்ற முஸ்லிம்களும், தலித்துகளும் கொல்லப்படுகிறார்கள். இதற்கு மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன? எத்தனை பேர் இதில் கைது செய்யப்பட்டுள்ளனர்? கூட்டு சேர்ந்து கொலை செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஜார்கண்ட், மத்தியப் பிரதேச மாநிலங்கள் கூட்டுக்கொலை செய்யும் களங்களாக உள்ளன” என்று பேசினார்.
இது குறித்து பேசிய மத்திய அமைச்சர் ஆனந்த் குமார் தாக்குதல் தொடர்பான வழக்குகள் அந்தந்த மாநில நீதிமன்றங்களில் நடந்து வருவதாக தெரிவித்தார்.