டிரெண்டிங்

காங்., திரிணாமுல் கட்சிகளின் 107 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணையவுள்ளார்கள் - முகுல் ராய்

காங்., திரிணாமுல் கட்சிகளின் 107 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணையவுள்ளார்கள் - முகுல் ராய்

webteam

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், திரிணாமுல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த 107 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணையவுள்ளதாக அம்மாநில பாஜக மூத்த தலைவர் முகுல் ராய் தெரிவித்துள்ளார். 

மேற்கு வங்கத்தில் 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக 18 இடங்களில் வெற்றிப் பெற்றது. அத்துடன் பாஜக தனது வாக்கு வங்கியையும் அம்மாநிலத்தில் அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இரண்டு எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர். அதன்பிறகு கடந்த மாதம் 28ஆம் தேதி முகுல் ராயின் மகன் மற்றும் 60 கவுன்சிலர்கள் உள்ளிட்டவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவில் இணைந்தனர். 

இந்நிலையில் இன்னும் 107 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணையவுள்ளதாக பாஜகவின் மூத்த தலைவர் முகுல் ராய் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 107 எம்.எல்.ஏக்கள் விரைவில் எங்கள் கட்சியில் இணைகிறார்கள். அவர்களின் பட்டியலை நாங்கள் தயாரித்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். 

முன்னதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜியிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் முகுல் ராய் 2017ஆம் ஆண்டு திரிணாமுல் கட்சியிலிருந்து வெளியேறினார். அதன்பின்னர் அவர் பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.