டிரெண்டிங்

புதிய சாதனைகளை படைக்க கூலாக காத்திருக்கும் தோனி..!

புதிய சாதனைகளை படைக்க கூலாக காத்திருக்கும் தோனி..!

jagadeesh

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் ஆட்டத்தில் சிஎஸ்கே கேப்டன் தோனி மூன்று சாதனைகளை நிகழ்த்த வாய்ப்பிருக்கிறது.

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சிஎஸ்கே தன்னுடைய இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொள்கிறது. மும்பைக்கு எதிரான முதல் போட்டியிலேயே தோனி ஏதேனும் சாதனை செய்வார், ரசிகர்களை கொண்டாட வைப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

அதற்கேற்ப சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தனது புதிய மைல்கல்லை எட்டினார். முதல் போட்டியில் 2 கேட்ச்களை தோனி பிடித்தார். அதன்மூலம் ஐபிஎல் போட்டிகளில் 100 கேட்ச்கள் என்ற மைல்கல்லை அவர் அடைந்தார். அதுமட்டுமின்றி மும்பையை வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் தொடர்களில் கேப்டனாக இருந்து தனது 100-வது வெற்றியை தோனி பதிவு செய்தார்.

இந்நிலையில் இன்றைய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் தோனி சில சாதனைகளை செய்ய வாய்ப்பு இருக்கிறது. முதலாவதாக தோனி இப்போது 295 சிக்ஸர்களை ஐபிஎல்லில் விளாசியுள்ளார். இன்றையப் போட்டியில் 5 சிக்ஸர்களை அடித்தால் 300 சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் இணைவார். ஐபிஎல்லில் ரோகித் சர்மா 361 சிக்ஸர்களும், சுரேஷ் ரெய்னா 311 சிக்ஸர்களையும் அடித்துள்ளனர்.

தோனி இப்போது விக்கெட் கீப்பராகவும், பீல்டராகவும் 100 கேட்சுகளை பிடித்துள்ளார். ஐபிஎல்லில் அதிக கேட்சுகளை பிடித்தவர் சுரேஷ் ரெய்னா. மொத்தம் 102. தோனி இன்று 3 கேட்சுகளை பிடித்தால், ஐபிஎல் போட்டிகளில் அதிக கேட்சுகளை பிடித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடிப்பார். பின்பு கடைசியாக விக்கெட் கீப்பராக மட்டும் 96 கேட்சுகளை பிடித்துள்ளார் தோனி, இதேபோல விக்கெட் கீப்பராக இருக்கும் தினேஷ் கார்த்திக் 101 கேட்சுகளை பிடித்துள்ளார். இந்த விக்கெட் கீப்பர் சாதனையையும் தோனி முறியடிப்பார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.