கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி காலமானார்.
கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பியான வசந்தகுமார் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என இன்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரத்தில் 1950ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி ஹரிகிருஷ்ண பெருமாள் மற்றும் தங்கம்மை ஆகியோருக்கு மகனாக பிறந்தவர் வசந்தகுமார். இவருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் உட்பட 6 சகோதரர்கள் மற்றும் 2 சகோதரிகள். இளம் வயதில் வி.ஜி.பி நிறுவனத்தில் விற்பனையாளராக பணியாற்றிய இவர், பின்னர் சிறிய மளிகை கடை ஒன்றை தொடங்கினார். அதன்பின்னர் படிப்படியாக முன்னேறி வசந்த் அண்டு கோ என்னும் வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்யும் வணிக நிறுவனத்தை தொடங்கினார்.
அந்நிறுவனத்தின் மூலம் தொழிலதிபராக வெற்றிகண்ட இவர், தமிழகம், புதுச்சேரி, கேரளா என மொத்தம் 64 கிளைகளை விரிபடுத்தி தொழில் சாம்ராஜ்யம் படைத்தார். இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்த இவர், மாநில துணைத் தலைவராக பதவி வகித்தார். அதுமட்டுமின்றி காங்கிரஸ் கட்டியின் செயல் தலைவராகவும் பதவி வகித்தார். அத்துடன் நாங்குநேரி தொகுதியின் எம்.எல்.ஏவாக 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார். 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட இவர் எம்.பியாக வெற்றி பெற்றார்.