காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி திரிணாமூல், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டால் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்னும் சில மாதங்களே தேர்தலுக்கு உள்ள நிலையில், ஒவ்வொரு அரசியல் நிகழ்வுகளும் உற்று நோக்கப்படுகின்றன. கூட்டணிக்கான காய்களை அனைத்து கட்சிகளும் நகர்த்தி வருகின்றன. ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பாஜகவும், ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சியும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திர பாபு மேற்கொண்ட முயற்சிகளுக்கு பின்னர், காங்கிரஸ் தலைமையிலான மாபெரும் கூட்டணி பாஜகவுக்கு எதிராக அமையும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால், சமீபத்திய நிகழ்வுகள் பாஜகவுக்கு எதிரான மெகா கூட்டணி அமைக்கும் முயற்சியில் சற்றே தொய்வு ஏற்பட்டுள்ளன. உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை தவிர்த்து சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அறிவிப்பை வெளியிட்டன. இது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு என்று பாஜக விமர்சித்தது.
அதனை தொடர்ந்து மம்தா பானர்ஜியின் தலைமை குறித்து கர்நாடக முதல்வர் குமாரசாமி உள்ளிட்டோர் கருத்து தெரிவித்தனர். அதன் தொடர்ச்சியாக, ஆந்திராவில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அதன் பொறுப்பாளரும் கேரள முன்னாள் முதல்வருமான உம்மன் சாண்டி கூறினார். தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருப்பதால், நிலைமை அனைத்தும் மாறுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
இந்நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி திரிணாமூல், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டால் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது. இந்தியா டுடே - கர்வே நிறுவனத்துடன் இணைந்து நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக மக்களின் மனநிலையை அறிய கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது.
ஆந்திர பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், டெல்லி, குஜராத், அரியானா, ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் மேற்குவங்காளம் மாநிலங்களைச் சேர்ந்த 13,179 பேரிடம் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.
அந்தக் கருத்துக் கணிப்பின்படி திரிணாமூல், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் இணைந்து காங்கிரஸ் தேர்தலை சந்தித்தால் வருகின்ற 269 தொகுதிகளை கைப்பற்றும். பாஜக தலைமையிலான கூட்டணி 219 இடங்களை பிடிக்கும். மற்ற கட்சிகள் 55 இடங்களை பிடிக்கும். காங்கிரஸ் கூட்டணி 44 சதவிகிதம் வாக்குகளும், பாஜக கூட்டணி 35 வாக்குகளும் பெறும் என்றும் கருத்துக் கணிப்பு கூறுகின்றன.
மொத்தமுள்ள 545 நாடாளுமன்ற தொகுதிகளில் 273 இடங்களை பிடித்தால் தான் ஆட்சி அமைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.