டிரெண்டிங்

“200 வருட சிலையை உங்களால் திருப்பி தர முடியுமா?” - மோடிக்கு மம்தா பதிலடி

“200 வருட சிலையை உங்களால் திருப்பி தர முடியுமா?” - மோடிக்கு மம்தா பதிலடி

rajakannan

வங்க புரட்சியாளர் ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் சிலை அதே இடத்தில் மீண்டும் நிறுவப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில், பாஜக தலைவர் அமித் ஷா பங்கேற்ற பேரணியில் நடந்த வன்முறை சம்பவத்தில் வங்கப் புரட்சியாளர் ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் சிலை சேதமடைந்தது. ‌சிலையை சேதப்படுத்தியது மற்றும் வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக பாஜக மற்றும் திரிணாமுல் கட்சி ஒருவர் மீது ஒருவர் மாறிமாறி குற்றம்சாட்டி வருகின்றனர்.

இது குறித்து உத்தரப் பிரதேசத்தின் மாவ் என்ற பகுதியில் பரப்புரையின் போது பேசிய நரேந்திர மோடி, மேற்குவங்கத்தில் நிகழ்ந்த வன்முறை மூலம் திரிணாமுல் காங்கிரசின் அராஜக போக்கை பார்க்க முடிந்தது என்று தெரிவித்தார். இந்தக் கலவரத்தின் போது சேதமடைந்த வங்க புரட்சியாளர் ஈஸ்வர சந்திர வித்யாசாகரின் பஞ்சலோக சிலை அதே இடத்தில் மீண்டும் நிறுவ ஏற்பாடு செய்யப்படும் என நரேந்திர மோடி உறுதியளித்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் பேச்சுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பதிலடி கொடுத்துள்ளார். “வித்யாசாகர் சிலை நிறுவப்படும் என பிரதமர் கூறியிருக்கிறார். சிலை நிறுவ மேற்குவங்கத்திடம் பணம் உள்ளது. 200 வருட பாரம்பரிய சிலையை அவரால் திரும்பி தர முடியுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்தோடு, வன்முறை குறித்து, “திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர்தான் வன்முறையில் ஈடுபட்டதாக பேசியிருக்கிறீர்கள். ஆனால், எங்களிடம் ஆதாரங்கள் உள்ளன. உங்களுக்கு வெட்கமாக இல்லையா?. ஆதாரங்கள் இருந்தால் நிரூபியுங்கள். இல்லையென்றால் உங்களை சிறைக்குள் தள்ளிவிடுவோம்” என்று மம்தா எச்சரித்துள்ளார்.