ஏழை ஒருவர் நாட்டின் பிரதமராகி விட்டதை காங்கிரஸ் கட்சியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அங்கு பரப்புரையில் ஈடுபட்டுள்ள மோடி, சூரத் நகரில் உரையாற்றினார். அப்போது காங்கிரசை கடுமையாக விமர்சித்துப் பேசிய பிரதமர், நான் வாழ்வாதாரத்துக்காக தேநீர் விற்றவன்தான். காங்கிரசைப் போல நாட்டை விற்கவில்லை என்று கூறினார். காலம் மாறி விட்டதை காங்கிரஸ் உணரவில்லை. காங்கிரசின் அகந்தை உச்சக்கட்டத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒரே இரவில் தனது அமைச்சரவையில் இருந்து மொரார்ஜி தேசாயை இந்திராகாந்தி நீக்கியதாகக் கூறிய பிரதமர், வங்கிகளை ஏழைகளுக்காக இந்திராகாந்தி திறக்கவில்லை என்றும் இப்போதுள்ள அரசுதான் அதைச் செய்திருப்பதாகவும் பேசினார். காங்கிரசின் இளைஞர் அணியுடைய ட்விட்டர் பக்கத்தில் பிரதமரை தேநீர் விற்றவர் என்று பதிவிட்ட நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் மோடி ஆவேசமாக பேசினார்.
இதற்கிடையே பிரதமரின் பேச்சுக்கு பதிலளித்துள்ள காங்கிரஸ், பிரதமர் மோடிக்கு ஏழைகளுடனோ, ஏழ்மையுடனோ தொடர்பில்லை என்று தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஆனந்த் சர்மா, ஏழைகளுக்கு பிரதமர் மோடி இதுவரை எதையும் செய்யவில்லை என்றும், அவருக்கு ஏழ்மையுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும் விமர்சித்தார்.