டிரெண்டிங்

"சீரமைத்த தமிழகம்... விதை, நான் போட்டது!" - கமல்ஹாசன் பேச்சு

webteam

"எங்களுடையது மிஷன் ராஜ்ஜியம், கமிஷன் ராஜ்ஜியம் அல்ல. சீரமைத்த தமிழகமாக மாறுவதற்கு விதை, நான் போட்டது" என்றார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.

திருப்பூர் மாவட்ட சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிடும் ம.நீ.ம வேட்பாளர்களை ஆதரித்து திருப்பூர் யூனியன் மில் சாலையில் பிரசாரப் பொதுக்கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியது:

"மக்களை இருட்டில் அமர்த்திவிட்டார்கள். 50 ஆண்டுகளாக மக்களுக்கு எதையும் செய்யாத அரசுகளே இருந்து வருகின்றன. ஓர் ஊழல் ஆட்சியை அகற்ற., இன்னொரு ஊழல் ஆட்சியை அமர வைக்கக் கூடாது. நேர்மையான ஆட்சியையே நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். உங்களுக்கு சிறப்பான தமிழகம் இருக்க வேண்டுமானால், எங்களிடம் ஆட்சியை கொடுங்கள். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகியவற்றால் கொங்கு மண்டலம் பெரியளவில் பாதிக்கப்பட்டது. நாங்கள் ஏழ்மைக்கோட்டை அழித்து, செழுமைக் கோட்டை உருவாக்க ஆசைப்படுகிறோம்.

எங்களிடம் ஆட்சியைக் கொடுங்கள்... போட்டோவிற்க்கு போஸ் கொடுப்பவர்கள், பிரியாணி, குவார்ட்டர் தருபவர்கள் இங்கு இல்லை. அதற்கு வேறு ஆட்கள் இருக்கிறார்கள். இலவசத்தை கொடுத்து பொதுமக்களை கடனாளிகளாக உருவாக்க எனக்கு ஆசை இல்லை.

எங்கள் ஆட்சியில் உலகத் தரத்திலான மருத்துவம் மற்றும் கல்வி இலவசமாக கிடைக்கும். எங்களைப்போல் பட்டியல் போட்டு, மற்ற கட்சியினர் சொல்ல முடியாது. ஏனென்றால் அவர்கள் இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்றுகின்றனர். உங்களால் நல்ல ஆட்சியை கொண்டு வர முடியும். அதற்கு, எங்களுக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள்.

ஏழு தலைமுறைக்கு சேர்த்து வைத்தவர்கள், எங்கள் ஆட்சிக்கு வந்த பின், போக வேண்டிய இடத்திற்க்கு போய்விடுவார்கள். நான் தாமதமாக வந்தாலும் என் எஞ்சிய வாழ்க்கை உங்களுக்காகத்தான். எங்களுடையது மிஷன் ராஜ்ஜியம், கமிஷன் ராஜ்ஜியம் அல்ல. சீரமைத்த தமிழகமாக மாறுவதற்கு விதை, நான் போட்டது. நான் எம்.ஜி.ஆரை பற்றி பேசுவேன். எம்.ஜி.ஆரின் தம்பி நான். நான் நிரந்தர தலைவன் இல்லை. நான் நிரந்தர மனிதன்" என்றார் கமல்ஹாசன்.