மதுரையில் வரும் 8-ஆம் தேதி நடைபெறவுள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஊர்வலத்தை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைப்பதாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளுக்கு கண்டனம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர்கள் தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு நிபந்தனையின்றி அனுமதி வழங்கியிருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த ஊர்வலத்தை அமைச்சர் தொடங்கி வைப்பதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதனிடையே, ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிகளை அந்தந்த மாநில அமைச்சர்கள் தொடங்கி வைப்பது வழக்கமான ஒன்று என பாரதிய ஜனதா தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் பேசும்போது, “பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் கூட, ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிகளை அந்தந்த மாநில அமைச்சர்கள் தொடங்கி வைத்துள்ளனர். எல்லாவற்றிற்கும் ஒரு அரசியல் சாயம் பூசுவது சரியாக இருக்காது. ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி என்பது தேசப்பற்றை வலியுறுத்தும் ஒரு நிகழ்ச்சி. அதனை பல மாநிலங்களில் பல தலைவர்கள் துவக்கி வைத்துள்ளனர்” என்றார்.