இந்த 5 ஆண்டுகளுக்கும் தனது ஆதரவு அதிமுகவிற்குதான் என எம்எல்ஏ கருணாஸ் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
திருவாடானை தொகுதி எம்எல்ஏ கருணாஸ். 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஜெயலலிதா மறைவிற்கு பின் டிடிவி பக்கம் சில காலம் இருந்தார். அதேபோல முதலமைச்சர் பழனிசாமிக்கும் எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தார். அத்துடன் சபாநாயகர் தனபாலை நீக்க வேண்டும் எனக்கோரி சட்டப்பேரவை செயலாளருக்கும் கடிதம் எழுதினார். பின், அதனை திரும்பவும் பெற்றார்.
இந்நிலையில் சட்டப்பேரவையில் இன்று பேசிய எம்எல்ஏ கருணாஸ், இந்த 5 ஆண்டுகளுக்கும் தனது ஆதரவு அதிமுகவிற்கு தான் எனத் தெரிவித்தார். 5 ஆண்டுகளையும் அதிமுக அரசு நிறைவு செய்ய வேண்டும் என்பதே தனது ஆசை எனக் குறிப்பிட்ட எம்எல்ஏ கருணாஸ், இனி தேர்தலில் போட்டியிடுவேனா? இல்லையா என்பது குறித்து தற்போது தெரியவில்லை எனவும் கூறினார்.
இதனிடையே பேரவையில் அமைச்சர் மணிகண்டனுக்கும் எம்எல்ஏ கருணாஸ் இடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டது. பேரவையில் பேசிய கருணாஸ், ராமநாதபுரத்தில் அப்துல்கலாம் பெயரில் கல்லூரி அமைக்கப்படும் என அறிவித்த அரசுக்கு நன்றி என கூறினார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் மணிகண்டன், கல்லூரி அமைய உள்ளது கருணாஸ் தொகுதியில் அல்ல. தன் தொகுதியில் என்றார். இதனையடுத்து பேசிய எம்எல்ஏ கருணாஸ், எனது தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என்பதை அமைச்சர் ஒப்புக்கொண்டதற்கு நன்றி எனக் கூறினார்.