டிரெண்டிங்

“எனது ஆதரவு அரசுக்கே” - எம்.எல்.ஏ கலைச்செல்வன் 

“எனது ஆதரவு அரசுக்கே” - எம்.எல்.ஏ கலைச்செல்வன் 

webteam

நம்பிக்கை வாக்கெடுப்பு எப்போது நடத்தினாலும் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பேன் என எம்.எல்.ஏ கலைச்செல்வன் தெரிவித்துள்ளார். 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கலைச்செல்வன். இவர் டி.டி.வி.தினகரன் ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். இதையடுத்து அதிமுக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூவரின் மீது சபாநாயகரிடம், கொறடா ராஜேந்திரன் புகார் அளித்தார். 

அந்தப் புகாரின் அடிப்படையில் எம்எல்ஏக்கள் 3 பேரும் 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கக் கோரி, சபாநாயகர் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதற்கிடையே, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர, பேரவை செயலாளரிடம் திமுக மனு அளித்துள்ளது. 

இதைத்தொடர்ந்து தன்மீது நடவடிக்கை எடுக்ககூடாது என்று உச்சநீதிமன்றத்தில் எம்.எல்.ஏ கலைச்செல்வன் மனுத் தாக்கல் செய்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க தடை விதித்து உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டது.

இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு எப்போது நடத்தினாலும் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பேன் என எம்.எல்.ஏ கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.  சபாநாயகருக்கு எதிராக திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் தந்தபோது ஆதரவு கேட்டு கொறாடா கடிதம் அனுப்பினார் எனவும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை திமுக திரும்பப் பெற்றாலும் எனது ஆதரவு அரசுக்கே எனவும் கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.