இடைத்தேர்தலில் ஆளும்கட்சிதான் வெல்லும் என்கிற தவறான வரலாற்றை மாற்றி ஆர்.கே. நகரில் திமுகவின் வெற்றி மூலம் புதிய வரலாறு படைக்க திமுக தொண்டர்கள் ஒத்துழைக்கவேண்டும் என அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆர்.கே. நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், திமுக வேட்பாளருக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகிக்கொண்டே இருப்பதாக தெரிவித்துள்ளார். நியாயமான முறையில் தேர்தல் நடைபெற்றால் திமுகவின் வெற்றியை யாராலும் தடுத்துவிட முடியாது என்பதை இடைத் தேர்தல் களத்திலிருந்து வரும் செய்திகள் உறுதிப்படுத்துவதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இதைக் குலைக்கும் வகையில் மாநிலத்தில் ஆள்வோரும், மத்தியில் ஆள்வோரும் பலவிதங்களிலும் அதிகாரங்களைப் பயன்படுத்த முனைவார்கள் என கூறியுள்ளார். அதிகார அம்புகளின் முனை முறிந்திடும் வகையில் ஆர்.கே. நகரில் தேர்தல் பணியாற்றும் அனைத்து தரப்பு திமுகவினரும் முனைப்புடன் இயங்கிட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். வாக்குப்பதிவு நாள் வரை பணியாற்றி, இடைத்தேர்தலில் ஆளுங்கட்சித்தான் வெல்லும் என்கிற தவறான வரலாற்றை மாற்றி திமுகவின் வெற்றி மூலம் புதிய வரலாறு படைத்திட திமுகவினரின் உழைப்பும், ஒத்துழைப்பும் அவசியம் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.