மத்திய பாஜக அரசின் மொழி வெறித்தூண்டுதலால் நடத்தப்பட்டுள்ள தாக்குதலே தமிழ்நாடு இல்லத்தின் பெயர் மாற்றம் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் தலைநகர் டெல்லியில், தமிழக அரசின் சார்பில் நீண்டகாலமாக செயல்பட்டு வரும் விருந்தினர் இல்லத்திற்கு வைக்கப்பட்டிருந்த 'தமிழ்நாடு இல்லம்' என்ற பெயரை, "வைகைத் தமிழ் இல்லம்", "பொதிகைத் தமிழ் இல்லம்" என்று பெயர் மாற்றம் செய்து, 'தமிழ்நாடு' என்ற பெருமையும், அருமையும் மிக்க சொல்லை மறைக்கத் துணிந்துள்ள அதிமுக அரசுக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
'தமிழ்நாடு', ஏழரை கோடி தமிழர்களின் உணர்வுடன் ஒன்றியிருக்கின்ற, உயிரோட்டமுள்ள ஒரு உயரிய சொல். அந்த உணர்வைச் சிதைத்திடும் வகையில், தலைநகர் டெல்லியில் உள்ள தமிழக இல்லத்தின் பெயரை மாற்றி, டெல்லியில் உள்ள தனது மேலாதிக்க எஜமானர்களை மகிழ்வித்து, தனது பணிவு மிகுந்த விசுவாசத்தை வெளிக்காட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முயற்சிப்பது மிகுந்த வேதனைக்குரியது. தமிழ்நாடு என்ற பெருமையும், அருமையும் மிக்க சொல்லை மறைக்கத் துணிந்துள்ள தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். மத்திய பா.ஜ.க. அரசின் மொழி வெறித்தூண்டுதலால் நடத்தப்பட்டுள்ள தாக்குதல் என்றே இதை எண்ணுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.