காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தங்களை கைது செய்தாலும் தொடர்ந்து நாளை போராட்டம் நடத்தப்படும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் போராட்டக் களத்தில் தெரிவித்தார்.
ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அளித்த கெடு மார்ச் 29-ம் தேதியுடன் முடிந்தும், மத்திய அரசு இன்னும் ஆணையத்தை அமைக்கவில்லை. இதனையடுத்து மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடுத்தது. இதனிடையே உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தக் கோரி தமிழக அரசு மற்றும் அனைத்துக் கட்சிகளும் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அடுத்த கட்ட போராட்டம் நடத்துவது தொடர்பாக விவாதிக்க திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், முத்தரசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதனையடுத்து பேசிய மு.க.ஸ்டாலின், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி வரும் 5ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் பேசிய அவர், “ பிரதமர் தமிழகம் வரும்போது கருப்புக் கொடி காட்டப்படும். டெல்டா மாவட்டங்களிலிருந்து காவிரி உரிமை மீட்புப் பயணம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் போராட்டத்தில் பங்கேற்க அதிமுகவுக்கு அழைப்பு விடுக்கப்படும்” என்றார்.
இதனையடுத்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில், திருமாவளவன், திருநாவுக்கரசர் உள்ளிட்ட ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது அவர்கள் அனைவரும் பச்சைத் துண்டு அணிந்திருந்தனர். போராட்டக் களத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், “ மத்திய அரசை கண்டித்து ஏப்.5 ஆம் தேதி நடைபெறும் முழு அடைப்பின்போது ரயில், பேருந்துகளை மறித்து போராட்டம் நடத்தப்படும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை எங்களை கைது செய்தாலும் தொடர்ந்து நாளை போராட்டம் நடத்தப்படும்” என தெரிவித்தார்.