2ஜி வழக்கில் எழுப்பட்ட குற்றச்சாட்டுகளைப் போலவே தீர்ப்புக்கும் ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டதால் ஆ.ராசா உள்ளிட்ட 14 பேரையும் விடுவிப்பதாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின் “வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வந்திருக்கிறது. அரசியல் வரலாற்றிl ஒரு கட்சியை அவமானப்படுத்தி அழிக்க வேண்டும் என்பதற்காக, திட்டமிடப்பட்டு போடப்பட்ட வழக்கு தான் இந்த 2ஜி வழக்கு. அந்த வகையில் பெரிய அளவில் பொய்க்கணக்குகளை காட்டி இந்த வழக்கை சித்தரித்தார்கள். அத்தகைய வழக்கில் அனைவருமே குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பு வழங்கிப்பட்டது மகிழ்ச்சி அழிக்கக்கூடிய ஒன்று. வழக்கின் குற்றச்சாட்டுகளுக்கு கொடுத்த முக்கியத்துவம் போன்று, தற்போது தீர்ப்புக்கும் ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.