சாலையோரம் திமுக நடத்திய மனித சங்கிலி போராட்டம், இயல்பு வாழ்க்கையை பாதித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளளது அதிமுக அரசின் இரட்டை வேட அரசியலை வெளிப்படுத்தியுள்ளதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கட்சித் தொண்டர்களுக்காக மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், திமுக முன்னேடுத்த மனித சங்கிலி போராட்டத்திற்கு மாநிலத்தை ஆள்பவர்களும் ஆதரவளித்திருக்க வேண்டும். காரணம், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது இதே அதிமுக ஆட்சியில்தான். மக்கள் நலனை மறந்த அதிமுக அரசின் இரட்டை வேடம் மக்கள் மன்றத்திலேயே வெளிப்பட்டிருக்குறது. இன்னும் எத்தனை காலம் ஆட்சி நீடிக்கும் என்ற பதற்றத்தில் எல்லாத் துறைகளிலும் ஊழல், எல்லாத் திட்டங்களிலும் கொள்ளை என்பதிலேயே ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
ஆட்சியாளர்களுக்கு அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றக் கூட நேரமில்லை. எடப்பாடி தொகுதிக்குட்பட்ட கச்சராயன்குட்டையை திமுகவினர் தூர்வாரி, கரைகளை செப்பனிட்ட நிலையில், ஆட்சியாளர்கள் அந்த ஏரியின் கரைகளை சிதைத்தனர். ஆளுங்கட்சி செய்ய மறந்த பணிகளை எதிர்க்கட்சி செய்யும் நிலையில், அதற்கு ஒத்துழைப்பு தராவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருக்கக் கூடாதா என மக்களே கேள்வியெழுப்பும் நிலை உருவாகியுள்ளது. மனித சங்கிலி பேராட்டத்தில் கலந்து கொண்டு அதனை வெற்றி பெறச் செய்த அனைத்து தலைவர்களுக்கும் தமது நன்றியை ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.