டிரெண்டிங்

ரஜினியின் அரசியல் அறிவிப்பு சாதகமா..? பாதகமா..?: ஸ்டாலின் கருத்து

Rasus

ரஜினியின் அரசியல் அறிவிப்பால் திமுகவிற்கு சாதகமோ..? பாதகமோ? அதுபற்றி கவலைப்படவில்லை என்றும், திமுக தனது கொள்கைகள் வழிநின்று வெற்றிப்பாதையை அடையும் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த், சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் கடந்த 26-ஆம் தேதி முதல் ரசிகர்களை சந்தித்து வருகிறார். இந்தச் சந்திப்பு இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் இன்று ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினி, தான் அரசியலுக்கு வருவது காலத்தின் கட்டாயம் என்றார். சட்டமன்ற தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என்றும் தெரிவித்துள்ளார். ரஜினியின் அரசியல் வருகைக்கு பல தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக பேசிய திமுக செயல் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், “ ரசிகர்களின் நீண்ட கால எதிர்பார்ப்புக்கு ரஜினி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதற்காக அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவிக்கிறன். ரஜினியின் அரசியல் அறிவிப்பால் சாதகமோ..? பாதகமோ? அதுபற்றி திமுக கவலைப்படவில்லை. திமுகவை பொறுத்தவரை அது ஏற்றுக் கொண்டுள்ள கொள்கைகள் வழிநின்று தன்னுடைய வெற்றிப்பாதையை அடையும். குதிரைபேர அதிமுக ஆட்சி செயல்பட முடியாத ஆட்சியாக இருந்துக்கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக தொடர்ச்சியாக மத்திய பாஜக அரசு இருக்கிறது என்ற சந்தேகம் நிலவுகிறது ” என தெரிவித்துள்ளார்.