டிரெண்டிங்

“வாரிசு அரசியல்” - விமர்சனங்களுக்கு வாய்ப்பளிக்கும் ஸ்டாலின், ஓபிஎஸ்

“வாரிசு அரசியல்” - விமர்சனங்களுக்கு வாய்ப்பளிக்கும் ஸ்டாலின், ஓபிஎஸ்

rajakannan

இரண்டு முக்கியமான நிகழ்வுகள் தமிழகத்தின் இரண்டு பிரதான கட்சிகளான திமுக, அதிமுகவுக்குள் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகிறது. அது வாரிசு அரசியல் குறித்த விவாதம்தான். வாரிசு அரசியல் என்பது தமிழக அரசியலுக்கு புதிதானது அல்ல. திமுக தலைவர் ஸ்டாலின் தன்னுடைய மகன் உதயநிதியையும், துணை முதல்வர் ஓபிஎஸ் தன்னுடைய மகன் ரவீந்திரநாத்தையும் அரசியல் களத்தில் ஆழமாக வேரூன்ற வைக்க முயற்சிக்கிறார்கள் என்ற பேச்சு பரவலாக இருந்து வருகிறது.

உதயநிதியை திட்டமிட்டு வளர்க்கிறாரா ஸ்டாலின்?

திமுக வட்டாரத்தில் இரண்டு விதமான பேச்சு தற்போது அதிகமாக அடிபடுகிறது. ஒன்று.. திமுகவின் அடுத்த இளைஞரணித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் வரப் போகிறார் என்பது. மற்றொன்று.. ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு மாநிலங்களவை எம்.பி பதவி வழங்கப்படும் என்பது. இதில், சபரீசன் குறித்த பேச்சு கூட குறைவாகத்தான் உள்ளது. ஆனால், உதயநிதி விரைவில் திமுகவின் இளைஞரணி தலைவர் ஆவார் என்ற தகவல்தான் அதிக அளவில் அடிபடுகிறது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலின் போது உதயநிதி ஸ்டாலின் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. 

அதேபோல், சமீபத்தில் ஆந்திர முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்ற நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் உடன் உதயநிதியும் கலந்து கொண்டார். பதவியேற்பு என்பது ஒரு அரசியல் நிகழ்வு. அப்படியொரு நிகழ்ச்சியில், கட்சி மூத்த தலைவர்களை விடுத்து உதயநிதியை அழைத்துச் சென்றது ஏன்? என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

உதயநிதியின் அரசியல் நுழைவு குறித்து கேள்விகள் எழுந்த போது, ஸ்டாலின் அதற்கு நேரடியாகவே பதிலளித்தார். ஒரே குடும்பத்தில் பலரும் திமுகவில் இருப்பது இயல்பு என்றார். கட்சிக்குள் நுழைவது என்பது சிக்கல் கிடையாது, நேரடியாக முக்கியமான பதவிகள் கொடுக்கும் போதுதான் எப்பொழுதும் கேள்விகள் எழுகிறது. ஒருவேளை உதயநிதிக்கு இளைஞரணி தலைவர் பதவி கொடுக்கப்பட்டால் திமுகவை தாண்டி நிச்சயம் விவாதங்கள் எழும்.

மகனுக்காக டெல்லி செல்லும் ஓபிஎஸ்

திமுகவில் உதயநிதியை வளர்த்துவிட ஸ்டாலின் முனைகிறார் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ள அதேவேளையில், அதிமுகவில் தன்னுடைய மகன் ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய அமைச்சர் பதவி பெற்றுத் தர ஓ.பன்னீர்செல்வம் முனைகிறார் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளது. மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் அனைவரும் தோல்வியை சந்தித்த பொழுதும் தேனி தொகுதியில் போட்டியிட்ட ரவீந்திரநாத் குமார் மட்டும் வெற்றி பெற்றார். ஒரே ஒரு எம்.பி என்ற முறையில் அவருக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டும் என குரல் அதிமுவின் ஒரு தரப்பினர் எழுப்பி வருகின்றனர். அது கட்சிக்குள்ளான பிரச்னை.

ஆனால், தேர்தல் நடப்பதற்கு முன்பாகவே வாரணாசியில் மோடியின் பிரச்சாரத்தில் ஓபிஎஸ் தன்னுடைய மகனுடன் சென்று கலந்து கொண்டார். கூட்டணியில் உள்ள கட்சி என்ற அடிப்படையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓபிஎஸ் கலந்து கொள்ளலாம். ஆனால், ரவீந்திரநாத்தை அழைத்துச் சென்றது ஏன் என்ற கேள்வி எழுகிறது. ஏன் கட்சியில் மூத்த தலைவர்களே இல்லையா? என்ற கேள்வியும் எழுகிறது. மத்திய அமைச்சர் பொறுப்பு ரவீந்திரநாத் குமாருக்கு கிடைத்தால் நிச்சயம் கட்சியை தாண்டியும் விவாதங்கள் எழும்.