டிரெண்டிங்

ஆளுநரின் ஆய்வுக்கு மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு

Rasus

ஆளுநரின் ஆய்வு சீரான நிர்வாகத்திற்கு துளியும் உதவாது என தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், இதுபோன்ற ஆய்வுகளை ஆளுநர் உடடினயாக கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கோவையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு மேற்கொண்டதற்கு திமுக செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளுநரின் ஆய்வு, மத்திய மாநில அரசுகளின் உறவுக்கோ, சீரான நிர்வாகத்திற்கோ துளியும் உதவாது என குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு என்பது புதுச்சேரி அல்ல என கூறியுள்ள மு.க.ஸ்டாலின், மாநில நிர்வாகத்தில் தலையிட ஆளுநருக்கு அதிகாரமில்லை எனவும் தெரிவித்துள்ளார். ஆட்டுக்கு தாடி எப்படி தேவையில்லையோ, அதுபோன்றது ஆளுநர் பதவி என்பது திமுகவின் கொள்கை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிர்வாகத்தை சீர்படுத்த விரும்பினால் பெரும்பான்மையை நிரூபிக்க முதலமைச்சருக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ள மு.க.ஸ்டாலின், மத்திய அரசும், ஆளுநரும் போட்டி போட்டுக் கொண்டு அரசின் அதிகாரத்தை கையில் எடுப்பது கண்டிக்கத்தக்கது எனவும் சாடியுள்ளார். எனவே ஆளுநர் இதுபோன்ற ஆய்வுகளை உடனடியாக கைவிட வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.