காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராட்டத்தை விட்டு ஓயமாட்டோம் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும் தமிழகம் முழுவதும் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. சென்னை மெரினா சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள தலைவர்கள் அனைவரும் மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டரில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், “ காவிரி நம் பிறப்புரிமை. அதனை தட்டிப் பறிக்க முயலும் மத்திய பாஜக அரசிற்கு எதிராகவும், அதற்குத் துணை போகும் குதிரைபேர அதிமுக அரசிற்கு எதிராகவும் மாநிலம் முழுவதும் முழு கடையடைப்பு போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை ஓய மாட்டோம்” என தெரிவித்துள்ளார்.
இதனிடையே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டு ஆங்காங்கே உள்ள மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.