கர்நாடகாவை சேர்ந்த சூரப்பாவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக நியமித்திருப்பதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
காவிரி பிரச்னையால் தமிழகம் போர்க்கோலம் பூண்டிருக்கும் தருணத்தில் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த எம்.கே.சூரப்பாவை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமித்திருக்கும் ஆளுநரின் செயல் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல என தனது முகநூலில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். மேலும், துணைவேந்தர் நியமனத்தை கர்நாடக மாநிலத் தேர்தலுடன் இணைத்துப் பார்ப்பதற்கான வாய்ப்பை ஒதுக்கிவிட முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மண்ணின் மைந்தர்களாக இருக்கும் கல்வியாளர்களையும் அறிஞர்களையும் இழிவுச் செய்யும் உள்நோக்கத்துடன் வெளிமாநிலங்களில் இருந்து வரிசையாக துணைவேந்தர் பதவிகளுக்கு இறக்குமதி செய்து, தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழக வளாகங்களை காவி மயமாக்க வேண்டாம் என ஆளுநரை வலியுறுத்தி கேட்டுக்கொள்வதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.