மாவட்ட அளவிலான கீழமை நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் மாநில அரசின் உரிமைகளை பறிக்க முயற்சிக்கும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்த பிறகு நேரமில்லா நேரத்தில் பேசிய எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், நீதிபதிகள் நியமனத்திற்கு நீட் போன்ற அகில இந்திய அளவிலான பொதுத்தேர்வை கொண்டு வர மத்திய அரசு முயற்சிப்பதாக கூறினார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கும், சென்னை உயர்நீதிமன்றத்திற்கும் இருக்கும் நீதித்துறை நியமன அதிகாரங்களை பறிக்கும் விதத்தில் இது அமைந்திருக்கிறது என்று ஸ்டாலின் கூறினார். கீழமை நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் அகில இந்திய தேர்வு தேவையில்லை என்று மூத்த வழக்கறிஞர்கள் மூலமாக அரசு முறைப்படி உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பாஜக ஆட்சி செய்யும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து இருப்பதைப் போல தமிழக அரசும் எதிர்ப்புத் தெரிவித்து உடனடியாக உச்சநீதிமன்றத்தில் அஃபிடவிட் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.