டிரெண்டிங்

காமெடி சீனை போல சரவணன் பேசுகிறார்: மு.க.ஸ்டாலின் பேட்டி

webteam

வீடியோ சர்ச்சையில் சிக்கிய எம்எல்ஏ சரவணன், திரைப்படங்களில் வரும் காமெடி சீனை போல பேட்டி கொடுக்கிறார் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் இருந்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ-க்கள் இன்று வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து அவர்கள் சட்டப்பேரவை வளாகத்தில் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் போலீசார் அவர்களை கைது செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், " ஏற்கனவே நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தோம். ஆனால் எங்களின் கோரிக்கைகளை ஏற்காமல் அப்போது வெளியேற்றினர். ஆனால், கூவத்தூர் விடுதியில் அதிமுக எம்எல்ஏ-க்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த போது, லஞ்ச பேரம் நடந்ததாக எம்எல்ஏ சரவணன் தெரிவிப்பது போன்ற வீடியோ காட்சிகள் தனியார் தொலைக்காட்சிகளில் இப்போது வெளியாகியுள்ளது. அதுகுறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர முயற்சித்தோம். ஆனால் இப்போதும் எங்களை அவையிலிருந்து வெளியேற்றிவிட்டனர்.

வீடியோ சர்ச்சை தொடர்பாக பேட்டி கொடுக்கும் எம்எல்ஏ சரவணனோ, வீடியோவில் இருப்பது நான் தான். ஆனால் என் குரல் அல்ல. என்று திரைப்படங்களில் வரும் காமெடி சீனை போல் பேட்டி கொடுக்கிறார். வீடியோ விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். மேலும் இந்த அரசு கலைக்கப்பட வேண்டும். கவிழ்க்கப்பட வேண்டும்" என்றார்.

கடந்த பிப்ரவரி மாதம் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, சசிகலா அணிக்கு ஆதரவாக வாக்களிக்க அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு பல கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாக எம்எல்ஏ சரவணன் கூறுவது போன்ற வீடியோவை ஆங்கில தொலைக்காட்சி ஒன்று வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.