சர்க்கரை விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து, வருகின்ற நவம்பர் 6-ம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளின் முன்பு திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ரேசன் கடைகளில் சர்க்கரை விலை 13 ரூபாய் 50 பைசாவிலிருந்து, 25 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சர்க்கரை விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்த ஸ்டாலின், வருகின்ற நவம்பர் 6-ம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளின் முன்பு திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார். உயர்த்தப்பட்ட சர்க்கரை விலையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தால் பொது விநியோகத் திட்டத்துக்கு ஏற்படும் மோசமான பாதிப்பு பற்றி கவலைப்படாமல், கையெழுத்துப் போட்ட 'குதிரை பேர' அரசின் கையாலாகாதத்தனத்தால் இன்றைக்கு ரேசன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரை விலை விண்ணளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், “தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முதலில் கடுமையாக எதிர்த்தார். ஆனால், அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில், ரகசியமாக இந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தவர் அன்று முதலமைச்சர் பொறுப்புகளை கவனித்துவந்த இன்றைய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். அதன்பிறகு பதவிக்கு வந்த இன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், மானியங்கள் இந்தச் சட்டத்தால் பறிபோவதுப் பற்றி கவலைப்படவில்லை. தமிழக அரசுக்கு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்திலிருந்து சிறப்பு நேர்வாக விலக்கு அளித்து, சர்க்கரை மானியத்தை தொடர்ந்து வழங்கிட வேண்டும். ஏழைகளுக்கும் இப்போதுள்ள மத்திய பா.ஜ.க. அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை மத்திய பா.ஜ.க. அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் உணர்த்தி வருவதாகவும், அப்படியொரு நடவடிக்கைதான் இப்போதைய சர்க்கரை விலை ஏற்றம்" என்றும் ஸ்டாலின் அந்த அறிக்கையில் கடுமையாக சாடியுள்ளார்.