திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதிக்கு சிலை வைப்பதற்காக அனுமதி வேண்டி அவரது மகன் மு.க. அழகிரி மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, கடந்த ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி காவேரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். அதனையடுத்து திமுகவின் தலைவராக அவரது மகன் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு திமுகவில் கருணாநிதியின் மகன் அழகிரிக்கும் அவரது சகோதரர் ஸ்டாலினுக்கும் கருத்து மோதல் எழுந்தது. தன்னை மீண்டும் கட்சியில் இணைக்கும் படி அழகிரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். கடந்த 5ம் தேதி சென்னையில் அவரது தந்தை மறைவின் 30வது நாளை அனுசரிக்கும் விதத்தில் பேரணி ஒன்றை ஏற்பாடு செய்து நடத்தினார். அதன் பிறகு அவர் பல்வேறு ஊடகங்களில் தனது நிலைப்பாடு குறித்து விளக்கம் அளித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் மதுரை மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “தமிழக முதல்வராக 5 முறை பொறுப்பேற்றவரும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் மேன்மைக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியவரும், தி.மு.கழகத்தை, பேரறிஞர் அண்ணாவிற்குப் பிறகு கட்டிக் காத்தவரும், பல்வேறு சோதனைகளை தாங்கி அண்ணாவின் இதயத்தை இரவலாகப் பெற்றவரும், 10 கோடி தமிழர்களின் அன்பைப் பெற்றவருமான கலைஞர் இயற்கை எய்தியதை, உணர்வுள்ள உண்மை தொண்டர்களும், தமிழர்களும் தாங்கிக் கொள்ள முடியாமல் இன்றும் கண்ணீர் வடிக்கின்றனர்.
இத்தகு சிறப்புமிகு தலைவர் கலைஞருக்கு, நான் 35 ஆண்டுகளாக வாழ்கின்ற மதுரை மாநகரில் மதுரை பால்பண்ணை அருகே உள்ள சந்திப்பில் வெண்கல சிலை அமைக்க அனுமதி வழங்கி உதவிட மிகவும் வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.