சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர்கள் முன்வர வேண்டும் என்று திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
பணிநிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சென்னையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் செவிலியர்கள் தொடர்ந்து 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று தலைமை செயலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து செவிலியர்கள் போராட்டம் வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் முழுமையான தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று ஒரு பகுதி செவிலியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களை இன்று நேரில் சந்தித்த கனிமொழி தனது ஆதரவை தெரிவித்தார்.
அதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர்கள் முன்வர வேண்டும் என்று கூறினார். மேலும், தமிழக அரசு மக்களின் எந்தவொரு பிரச்னைகளை கவனிக்காமல் டெல்லியில் சொல்வதைச் செய்வதற்காக மட்டுமே செயல்படுகிறது என்று குற்றசாட்டினார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் மற்றும் கர்ப்பிணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி இருப்பதாக தெரிவித்த அவர், செவிலியர்களின் இந்த போராட்டத்திற்கு திமுக முழு ஆதரவு அளித்துள்ளது என்றார். செவிலியர்களின் நியாமான கோரிக்கைகளை ஏற்று அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும் இந்தப் பிரச்னை குறித்து நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் திமுக சார்பில் குரல் எழுப்பப்படும் என்றும் கனிமொழி உறுதியளித்தார். இந்நிலையில் தற்போது செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.