டிரெண்டிங்

தொகுதிக்குள் முடங்கிய அமைச்சர்கள் : தோல்வி பயம் காரணமா?

Veeramani

பரப்புரை முடிவதற்கு 5 நாட்களே உள்ள நிலையில், தமிழக அமைச்சர்கள் தாங்கள் போட்டியிடும் தொகுதியை மட்டும் கவனத்தில் கொண்டு தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இது வெற்றிக்கான உத்தியா ? தோல்வி பயமா? என்ற விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருபெரும் ஆளுமைகள் இல்லாத முதல் சட்டமன்றத் தேர்தலை தமிழகம் எதிர்கொள்கிறது. ஜெயலலிதா இல்லாமல் கடந்த 30 ஆண்டுகளில் சந்திக்க உள்ள முதல் தேர்தல் என்பதால் அமைச்சர்கள் தொடங்கி அனைத்து அதிமுக வேட்பாளர்களும் தங்களது தொகுதிக்குள்ளேயே தஞ்சம் அடைந்துள்ளனர் என்பதுதான் கள யதார்த்தம்.

ஜெயலலிதா காலத்தில் ஒரு மாவட்டத்தை தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு வெற்றி பெற வைக்க வேண்டியது அமைச்சர்களின் பொறுப்பு. ஆனால் இன்றைய நிலை தலைகீழாக மாறிவிட்டதாகவே அதிமுகவினர் கூறுகின்றனர். தாங்கள் போட்டியிடும் தொகுதியை மட்டும் கவனத்தில் கொண்டு தேர்தல் பணிகளையும், பிரசாரத்தையும் மேற்கொண்டு வருகிறார்கள் அமைச்சர்கள். மாவட்ட செயலாளர்களோ தங்களது கட்சி அளவிலான மாவட்டத்திற்குள் மட்டுமே வலம் வருகின்றனர்.

கட்டாயம் வெல்ல வேண்டும் என்பதே இதற்கு காரணம் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் துரை கருணா, “அதிமுகவில் தற்போதைக்கு ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் மட்டுமே தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரத்தை மேற்கொள்கின்றனர். துணை ஒருங்கிணைப்பாளர்களான கேபி முனுசாமி மற்றும் வைத்தியலிங்கம் கூட அவர்கள் போட்டியிடும் தொகுதிகளை விட்டு பிரசாரத்திற்கு வெளியே வருவதில்லை. தாங்கள் சார்ந்த மாவட்டத்தில் உள்ள தொகுதிகளை கைப்பற்றி கொடுப்பவர்களுக்கு மட்டுமே அதிமுகவில் அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற நிலை மாறி, தாங்கள் வெற்றி பெற்றால் போதும் என்ற நிலைக்கு அமைச்சர்கள் வந்துவிட்டனரா என்ற கேள்வி எழாமல் இல்லை” என தெரிவித்தார்