கொரோனா பரவல் முடிவுக்கு வராத சூழலில் அமைச்சர்கள் படை சூழ வேட்புமனுத்தாக்கல் செய்ய வருகை புரிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் அறிக்கைகள் என பரபரத்து வரும் தமிழக அரசியல் களம், முக்கிய தலைவர்கள் பரப்புரையை தொடங்கவுள்ளதால் இன்னும் அனல் பறக்கவுள்ளது. அதன்படி முதலமைச்சர், சீமான், கமல், ஸ்டாலின், டிடிவி தினகரன் ஆகியோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.
இதனிடையே அமைச்சர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்து வருகின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் இன்னும் சற்று நேரத்தில் வேட்புமனுதாக்கல் செய்ய உள்ளார். இதற்காக அவர் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் படை சூழ சுமார் 3 கிலோமீட்டார் ஊர்வலமாக வந்தார். கடந்த முறை திமுக கூட்டணியில் நிறுத்தப்பட்ட காங்கிரஸ் வேட்பாளரை 23,590 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் உதயக்குமார். இந்த நிலையில் இந்த தொகுதியில் திமுக நேரிடையாக போட்டியிடுகிறது. வேட்பு மனுத்தாக்கல் செய்ய வரும்போது சாலையோரம் நின்றிருந்த மூதாட்டிகளின் காலில் விழுந்து அமைச்சர் உதயக்குமார் ஆசிர்வாதம் வாங்கினார்.
அதேபோல் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ போட்டியிடுகிறார். அதற்காக அவர் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் படை சூழ வேட்பு மனு தாக்கல் செய்ய வருகை புரிந்தார். கொரோனா பரவல் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் அண்மையில் தெரிவித்தார். மேலும், திநகர் பகுதியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதமும் விதித்தார். இந்த நிலையில் அமைச்சர்களும், வேட்பாளர்களும் சமூக இடைவெளி இன்றியும் முகக்கவசம் இன்றியும் படை சூழ வேட்பு மனுத்தாக்கலுக்கு வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.