டிரெண்டிங்

ஸ்டாலின் கனவு பலிக்காது: அமைச்சர் விஜயபாஸ்கர் அறிக்கை

ஸ்டாலின் கனவு பலிக்காது: அமைச்சர் விஜயபாஸ்கர் அறிக்கை

webteam

அரசியலில் இருந்து தன்னை அழிக்கும் நோக்கோடு அவதூறுகளை பரப்பி வரும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினின் கனவு பலிக்காது அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தன் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனையை பயன்படுத்தி அதிமுக அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில், பிரச்னையை ஸ்டாலின் திசை திருப்புவதாக விஜயபாஸ்கர் சாடியுள்ளார்.

வருமான வரித்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்துவரும் தான், எந்தக் குற்றமும் செய்யவில்லை என சட்டரீதியாக விரைவில் நிறுவுவேன் என்றும் கூறியுள்ளார். 

புதுக்கோட்டையில் தன் பெயரில் 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கல்குவாரியின் பொது அதிகாரத்தை, அமைச்சராகியதும் தனது தந்தை பெயருக்கு மாற்றி கொடுத்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களில் கூறுவது போல் சுப்பையா சமையல்காரர் அல்ல என்றும், அவர் தன் நிறுவனத்தில் சப் கான்ட்ராக்டராக பணியாற்றுபவர் என்றும் குறிப்பிட்டுள்ள விஜயபாஸ்கர், பினாமி பெயரில் எந்த தொழிலிலும் ஈடுபடவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார். 

தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தொடர்ந்து தன்மீது எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவதாகவும், அவருடைய கனவு பலிக்காது என்றும் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். தான் சொல்லி தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் ஸ்டாலின் இல்லை என்றாலும் காலம் தனது கணக்கை சரியாக முடிக்கும் என்றும் அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.