டிரெண்டிங்

இனிவரும் காலங்களில் சர்ச்சைக்குரிய காட்சிகள் வேண்டாம் - அமைச்சர் உதயகுமார்

இனிவரும் காலங்களில் சர்ச்சைக்குரிய காட்சிகள் வேண்டாம் - அமைச்சர் உதயகுமார்

webteam

இனிவரும் காலங்களில் அரசியல் நோக்கத்தோடு சர்ச்சைக்குரிய காட்சிகளை வைக்க வேண்டாம் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். 

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘சர்கார்’. கதை திருட்டு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளை தாண்டி தீபாவளியன்று இப்படம் வெளியாகி பெரும் வசூல் சாதனை படைத்து வருகிறது. 

படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்களை விமர்சிப்பது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சை காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி அதிமுகவினர் எதிர்ப்பும் போராட்டமும் நடத்தி வருகின்றனர். தியேட்டர் முன் இருக்கும் விஜய் பேனர்கள் கிழிக்கப்பட்டு வருகின்றன. 

மேலும் அனுமதி வாங்காமல் பேனர் வைத்ததாக கூறி பல்வேறு இடங்களில் விஜய் ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக தியேட்டர் உரிமையாளர் சங்கம் ஒப்புதல் அளித்தது. 

இந்நிலையில், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க இணைச்செயலாளர் ஸ்ரீதர் புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்தார். அப்போது, ’சர்கார்’ படத்திற்கான சென்சார் வேலைகள் காலை 10.30 மணி அளவில் தொடங்குவதாகவும் சர்ச்சைக்குரிய காட்சிகள் அகற்றப்படும் என தயாரிப்பாளர்கள் உறுதி அளித்ததாகவும் தெரிவித்தார். 

’சர்கார்’ திரைப்படத்தில் இருந்து மிக்ஸி, க்ரைண்டர், ஃபேன் ஆகியவற்றை தூக்கி நெருப்பில் எரியும் காட்சி மற்றும் வரலட்சுமி கதாபாத்திரத்தின் பெயர் கோமளவல்லி என்பதை ஆடியோ கட் செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டார். இன்று மதியம் அல்லது மாலையில் திரையிடப்படும் காட்சிகளில் இந்த சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெறாது எனவும் தெரிவித்தார்.

இதனிடையே நேற்று நள்ளிரவு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டிற்கு போலீசார் சென்று கதவை தட்டியதாக கூறப்படுகிறது. ஆனால் காவல் துறை அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் கோரியுள்ளார். 

இந்நிலையில், இனிவரும் காலங்களில் அரசியல் நோக்கத்தோடு சர்ச்சைக்குரிய காட்சிகளை வைக்க வேண்டாம் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். 

மேலும் அரசின் இலவச திட்டங்களை விமர்சிக்க யாருக்கும் தகுதி இல்லை எனவும் நடிகர் விஜய் ரசிகர்களின் இல்லங்களிலும் அரசின் விலையில்லா பொருட்கள் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.