உண்மைக்கு மாறாக பேசுவதை தினகரன் நிறுத்தாவிட்டால் பல தகவல்களை வெளியிட வேண்டி வரும் என அமைச்சர் உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நீட் தேர்வில் இருந்து தமிழக அரசு விலக்கு பெறாததே மாணவி அனிதாவின் மரணத்திற்கு காரணம் என தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். திருச்சியில் தினகரன் அணி சார்பில் நீட் தேர்வுக்கு எதிரான பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய தினகரன், 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்தது தவறு என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்போம் என்றார். மேலும், ஜெயலலிதாவின் கொள்கைகளுக்கு எதிராக முதலமைச்சர் செயல்படுவதாகவும், அவரை விரைவில் வீட்டிற்கு அனுப்புவோம் என்றும் கூறினார்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயகுமார், உண்மைக்கு புறம்பாக பேசுவதை தினகரன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இல்லையென்றால் பல்வேறு தகவல்களை வெளியிட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். அத்துடன் முதலமைச்சர் மீது இல்லாத ஒரு வழக்கை இருப்பது போன்று தினகரன் அவதூறு பரப்புவதாகவும் உதயகுமார் கண்டனம் தெரிவித்தார்.