அமமுக கட்சியை அதிமுகவில் இணைக்கக்கோரி தினகரன் தான் தூதுவிட்டார் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்திக்க துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் நேரம் கேட்டதாக தினகரனின் ஆதரவாளரான தங்கத்தமிழ்ச்செல்வன் தெரிவித்தார். மதுரையில் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த அவர் துணை முதல்வர் இரட்டை வேடம் போடுவதாக குற்றம்சாட்டினார். இதைத்தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரனுடனான சந்திப்பு தொடர்பான கேள்விக்கு, அது கடந்த காலம் என பதிலளித்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, “அமமுகவை அதிமுகவில் இணைக்கோரி தினகரன் தூதுவிட்டார். இரண்டு கட்சிகளை இணைக்கலாம் என கடந்த மாதம் தூதுவிட்டிருந்தார். கட்சிகளை இணைத்துவிட்டு நீங்களே முதல்வராக தொடருங்கள் என தினகரன் கோரினார். ஆனால் அதிமுக ஏற்றுக்கொள்ளாததால் விரக்தியின் விளிம்பில் தங்கதமிழ்ச்செல்வன் உளறுகிறார். ஒற்றுமையாக உள்ள முதலமைச்சர், துணை முதலமைச்சரை பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொண்டனர். சசிகலா குடும்பத்திற்கு எதிராக தர்மயுத்தம் தொடங்கிய ஓபிஎஸ் எவ்வாறு தினகரனை சந்திப்பார்? அதிமுக கோரிக்கையை ஏற்காததால் தான் தற்போது பொய்யான பரப்புரையை அவர்கள் செய்கின்றனர்” என்று தெரிவித்தார்.