ரஜினி, கமல் போன்றவர்கள் முதல்வர் பதவிக்காக அரசியலுக்கு வருகிறார்கள் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
மதுரை காமராஜர் சாலையில் அதிமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவிற்கு இளைஞர் அணி சார்பில் வேல் பரிசளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர், “இளைஞர்களுக்கு எல்லாம் விடிவெள்ளியாக திகழ்ந்தவர் அப்துல் கலாம். ஆனால் அவருக்கு முன்னாலேயே இளைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தது அ.தி.மு.க.. அதற்கு நானே சாட்சி. சாதாரண ஏழை குடும்பத்தில் எனக்கு இவ்வளவு தூரம் பதவி அளித்தது இந்த கட்சிதான்.
திரையுலகில் எவ்வளவு நடிகர்கள் இருந்தாலும் பணத்தை வாங்கி கொண்டு கொள்கையை விட்டு கொடுக்காமல் 138 திரை படங்களில் நடித்தவர் எம்.ஜி.ஆர். பணத்திற்காக சிகரெட் பிடிப்பது போல, மது அருந்துவது போல பெண்களை மானபங்கபடுத்துவது போல எம்.ஜி.ஆர் நடிக்காதவர்” என்றார்.
மேலும், “இன்றைய நடிகர்கள் பணத்திற்காக இளைஞர்களை சீரழிக்கும் வேடங்களில் நடிக்கிறார்கள். ரஜினி, கமல் போன்றவர்கள் முதல்வர் பதவிக்காக அரசியலுக்கு வருகிறார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் முதல்வர் பதவிக்காக அரசியலுக்கு வரவில்லை என அறிவித்தவர். எனவே அ.தி.மு.க.வில் சாதாரண தொண்டனும் பெரிய பதவிக்கு வரலாம். அதற்கு முதல்வர், துணை முதல்வரே சாட்சி” என்று பேசினார் அமைச்சர் செல்லூர் ராஜூ.