டிரெண்டிங்

ஈபிஎஸ், ஓபிஎஸ்-ஐ அடுத்தடுத்து சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன்

webteam

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அடுத்தடுத்து சந்தித்துள்ளார்.

அதிமுகவில் செயற்குழு கூட்டத்திற்குப் பின்னர் சர்ச்சைகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக முதலமைச்சர் வேட்பாளர் யார் ? என்று முடிவு செய்வதில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்புகளுக்கு இடையே பிரச்னை எழுந்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் எந்த வித பிரச்னையும் அதிமுகவில் இல்லை என அமைச்சர்களும், நிர்வாகிகளும் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதேசமயம் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது ஆதரவாளர்களும், எடப்பாடி பழனிசாமியை அவரது ஆதரவு அமைச்சர்களும் அடிக்கடி சந்தித்து ஆலோசனை செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இன்று முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து திடீர் ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தையும் அவர் சந்தித்திருக்கிறார். இந்த விவகாரம் அதிமுக வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப்பின்னர் அதிமுக பிளவுபட்டபோது அமைச்சர் பாண்டியராஜன் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு ஆதரவளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, கடந்த 28ஆம் தேதி நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்திற்குப் பின்னர் பேசிய கே.பி.முனுசாமி, வரும் அக்டோபர் 7ஆம் தேதி அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் ? என்று அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.