டிரெண்டிங்

அபிநந்தன் பெயரை விஜய் ஆனந்த் என மாற்றிய அமைச்சர்

Rasus

பாகிஸ்தான் ராணுவத்தால் விடுவிக்கப்பட்ட விங் கமாண்டர் அபிநந்தன் என்பதற்கு பதிலாக விஜய் ஆனந்த் என தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது.

நீலகிரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பவானிசாகர் சட்டமன்றத் தொகுதியில் அரசூர், உடையார்பாளையம், உக்கரம் ஆகிய இடங்களில் அதிமுக வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பரப்புரை மேற்கொண்டார். எருமைகாரன்பாளையத்தில் வீடுவீடாக வாக்கு சேகரித்த அமைச்சர் கே.சி.கருப்பணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது மத்திய பாஜக அரசு மக்களவைத் தொகுதியில் அதிமுகவோடு கூட்டு சேர வேண்டும் என விரும்பி, நீங்கள் கொடுப்பதை கொடுங்கள் என சீட் கேட்டனர். அதேபோல பாமக, தேமுதிக, தமாகா ஆகியோரும் அதிமுக கூட்டணியில் சேர வேண்டும் என விரும்பி இணைந்தனர். மத்தியில் மோடி அரசு சிறப்பாக செயல்படுகிறது.

பாகிஸ்தான் சீன போன்ற நாடுகள் நமக்கு இடையூறாக இருக்கின்றன. புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக 15 நிமிடத்தில் பாகிஸ்தானிலுள்ள முகாமை அழித்தது இந்திய விமானப்படை. அதற்கு உறுதுணையாக இருந்த பைலட் விஜய் ஆனந்தை பாராட்டுகிறோம் என அமைச்சர் கூறியபோது அருகில் இருந்தவர்கள் அவர்  அபிநந்தன் எனக் கூறினார். இதனால் சுதாரித்துக்கொண்ட அமைச்சர் பிறகு அபிநந்தன் என்றார். இதனிடையே அருகில் இருந்தவர்கள் மண்டையை பிளக்கும் வெயிலில் சூடு தாங்காமல் அமைச்சர் தவறாக சொல்லிவிட்டதாக புது விளக்கம் கொடுத்தனர்.