டிரெண்டிங்

“காசுக்காக நடிக்கும் விஜய் சொல்ல அருகதை இல்லை” - அமைச்சர் காமராஜ்

“காசுக்காக நடிக்கும் விஜய் சொல்ல அருகதை இல்லை” - அமைச்சர் காமராஜ்

webteam

இலவசம் வேண்டாம் என மக்கள் கூற காசுக்காக நடிப்பவருக்கு அருகதை இல்லை என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியத்தில் உருவாகிய ‘சர்கார்’ திரைப்படத்தில் நடிகர் விஜய் அரசியல்வாதியை எதிர்க்கும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர்.

சர்காரின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் விஜய், ‘மெர்சல்’ திரைப்படத்தில் கொஞ்சம் அரசியல் இருந்தது. சர்காரில் அரசியல் மெர்சலாக உள்ளது எனத் தெரிவித்தார். 

அதன்பிறகு‘சர்கார்’ படம் பல தடைகளை சந்தித்தது. பல்வேறு சர்ச்சைகளை தொடர்ந்து தீபாவளியன்று வெளியானது. 

இப்படத்தில் பெண் அரசியல்வாதியாக நடித்துள்ள வரலட்சுமியின் பெயர் கோமலவள்ளி. இது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இயற்பெயர் என்பதால் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானது. மேலும் அரசியல் வசனங்கள், தமிழக அரசியல் களத்தின் பல நிகழ்வுகள் முதல் இலவச திட்டங்களை குறை கூறுவது வரை முழு அரசியல் படமாக அமைந்துள்ளது எனக் கூறப்படுகிறது. 

ஏற்கெனவே ‘சர்கார்’ படத்தில் அரசியல் நோக்கத்திற்காக சில காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஜெயக்குமார் ஆகியோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், இலவசம் வேண்டாம் என மக்கள்தான் கூற வேண்டும் எனவும் காசுக்காக நடிப்பவர், தயாரிப்பவர் சொல்ல அருகதை இல்லை எனவும் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.