டிரெண்டிங்

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா - பாட்டுப் பாடி தொண்டர்களை மகிழ்வித்த ஜெயக்குமார்

rajakannan

சென்னை நந்தனத்தில் நடைபெற்று வரும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பாடல்களை பாடி தொண்டர்களை மகிழ்வித்தார். 

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50ஆம் ஆண்டு பொன்விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் நடைபெற உள்ள விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

இன்று காலை புகைப்பட கண்காட்சியை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கிவைத்தார். விழா நடைபெறும் நந்தனம் பகுதி மற்றும் சென்னையின் முக்கிய பகுதிகளில் 17ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே, விழாவுக்கு முன்பாக மேடையில் பாடல் கச்சேரி நடைபெற்றது. அதில், கச்சேரி நடத்துபவர்கள் பாடிக் கொண்டிருந்தனர். அப்போது, அமைச்சர் ஜெயக்குமாரும் மைக்கை வாங்கி எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியாகி பிரபலமடைந்த பாடல்களை அவர் பாடினார். 

'ரிக்சாக்காரன்', 'ஒளிவிளக்கு' பாடல்களை பாடி அசத்தினார். பாடகி சுசீலாவுடன் இணைந்து அமைச்சர் ஜெயக்குமார் பாடல்களை பாடியதால், அங்கு கூடியிருந்த தொண்டர்கள் உற்சாகமடைந்தனர்.