சம்மன் அனுப்பப்பட்டால் குற்றவாளியா என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக, ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதாவின் உறவினர்கள், நண்பர்கள், பணியாளர்கள் என அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது.
இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் முன்னாள் அமைச்சர் பொன்னையனுக்கும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியது.
இந்நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. முன்னாள் அமைச்சர் பொன்னையன் விசாரணை ஆணையத்தில் ஆஜராகினார். ஜெயலலிதா தாக்கப்பட்டார் என்பன போன்ற பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை ஊடகங்கள் வாயிலாக பொன்னையன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, ஆணையம் அவருக்கு சம்மன் அனுப்பியிருந்தது. முன்னாள் அமைச்சர் பொன்னையனிடம், சசிகலா தரப்பினர் குறுக்கு விசாரணை செய்தனர்.
இதனிடையே சொந்த காரணங்களுக்காக தன்னால் ஆஜராக முடியவில்லை என ஆறுமுகசாமி ஆணையத்திடம் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தற்போது வேறொரு தினத்தில் ஆஜராக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்ப ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்கள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், சம்மன் யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பப்படலாம்; சம்மன் அனுப்பப்பட்டால் குற்றவாளியா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.