டிரெண்டிங்

“கர்நாடக முதல்வர் அழுது புலம்பினாலும் செல்லாது” - ஜெயக்குமார்

“கர்நாடக முதல்வர் அழுது புலம்பினாலும் செல்லாது” - ஜெயக்குமார்

webteam

காவிரி விவகாரத்தில் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி அழுது புலம்பினாலும் செல்லாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஓய்வு எடுப்பதற்காக அமைச்சர் ஜெயக்குமார் வந்திருந்தார். அங்கிருந்து நாமக்கல் பொதுக்கூட்டத்திற்கு செல்லும் முன்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “காவிரி விவகாரத்தில் குமாரசாமி எவ்வளவு அழுது புலம்பினாலும் செல்லாது. சட்ட ரீதியாக சந்திக்க முடியாத அவர், அரசியல் ரீதியாக பேசி வருகிறார். சேலம் எட்டு வழிச்சாலை விவகாரத்தில் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் முறையாக கொடுக்கப்படும். விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு இல்லாமல் கருத்துகள் கேட்கப்பட்டு திட்டம் நிறைவேற்றப்படும்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “ கமல்ஹாசன் கர்நாடக முதல்வர் குமாரசாமியை சந்தித்த பின்னர், டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் ராகுல் மற்றும் சோனியாவை சந்தித்திருப்பது, காவிரிக்காகவும் இருக்கலாம் அல்லது கூட்டணிக்கு அச்சாரமாகவும் இருக்கலாம். செய்தியாளர்கள் எவ்வாறு செய்தி சேகரிக்க ஆய்விற்கு செல்கிறார்களோ, அதேபோல தூய்மைப்பணிக்கு ஆளுநர் ஆய்விற்கு செல்கிறார். ஸ்டாலின் மற்றும் இதர அமைப்புகள் ஏதாவது செய்து மக்கள் மத்தியில் எடுபட வேண்டும் என்று போராட்டங்களை தூண்டுகின்றனர்” என்று கூறினார்.