தமிழகம் சம்பந்தப்பட்ட 23 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்தாண்டு முதல் அமலுக்கு வந்தது. ஜிஎஸ்டியை பொறுத்தவரை 5, 12, 18, 28 என நான்கு விகிதங்களில் வரி வசூலிக்கப்படுகிறது. முன்னர் பேசிய பிரதமர் மோடி ஜிஎஸ்டி வரி விதிப்பில் 99 சதவீதப் பொருட்கள் 18 சதவீதம் அல்லது அதற்கும் குறைவான வரிவிதிப்பிற்கு கொண்டு வரப்படும் எனத் தெரிவித்திருந்தார். நாட்டு மக்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்படும் எனக் கூறினார்.
இந்நிலையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 31-வது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.
டெல்லியில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 33 பொருட்கள் மீதான வரியை குறைக்க முடிவு எடுக்கப்பட்டது. 100 ரூபாய்க்கு மேல் உள்ள சினிமா டிக்கெட்டுக்கான ஜிஎஸ்டி 28 %ல் இருந்து 18%ஆக குறைக்கப்பட்டுள்ளது.
100 ரூபாய்க்கு கீழ் உள்ள சினிமா டிக்கெட்டுக்கான ஜிஎஸ்டி 18%ல் இருந்து 12%ஆக குறைக்கப்பட்டுள்ளது. தமிழகம் சம்பந்தப்பட்ட 23 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது. இதில் 28% உள்ள பொருட்கள் 12% ஆகவும் சில பொருட்கள் 5% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது”என்று கூறினார்.