முதலமைச்சர் கட்டுப்பாட்டில் தமிழக அமைச்சரவை இருப்பதாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.
கடந்த 20-ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “எய்ம்ஸ் மருத்துவர்கள் வந்தபோது ஜெயலலிதாவிற்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்கலாம் என பேசப்பட்டது. ஆனால் ஜெயலலிதா சுயநினைவோடு இருக்குபோது அவரே வெளிநாட்டில் சிகிச்சை பெற விரும்பவில்லை” எனக் கருத்தை முன் வைத்தார்.
இதனால் ஜெயலலிதாவை சிகிச்சைக்கு வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லாதது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அளித்த பதிலில் சந்தேகம் இருப்பதால் அவரது பின்னணி குறித்து விசாரிக்க வேண்டும் என சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் வலியுறுத்தினார். மேலும் அமைச்சர் ஜெயக்குமார், போலீஸ் ட்ரீட்மெண்ட் கொடுத்தால் உண்மை தெரியவரும் என குறிப்பிட்டார்.
இதற்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கம் கண்டனம் தெரிவித்து அமைச்சர்களை முதலமைச்சர் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என வலியுறுத்தியது. இந்நிலையில், முதலமைச்சர் கட்டுப்பாட்டில்தான் தமிழக அமைச்சரவை இருப்பதாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஐஏஎஸ் அதிகாரிகளை மதிப்பதாகவும் அமைச்சர்கள் முதலமைச்சர் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.
“ஒரு தலைவர் மரணம் குறித்து சில கருத்துகள் தான் தெரிவிக்கப்பட்டன. உண்மை நிலை மக்களுக்கு தெரியபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் கருத்துக்கள் சொல்லப்பட்டன. யாரையும் தனிப்பட்ட முறையில் எந்த குற்றச்சாட்டும் சொல்லவில்லை. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனை நான் மதிக்கிறேன். தங்களுக்கு தெரிந்த உண்மையை விசாரணை ஆணையத்தில் தெரிவிப்பது மரபு. இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இதயம் போன்றவர்கள். அவர்களை அரசு மதிக்கிறது. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மீது அமைச்சர் சிவி சண்முகம் தனிப்பட்ட முறையில் குற்றம் சாட்டவில்லை” என குறிப்பிட்டார்.