மதுவில்லா தமிழ்நாட்டை உருவாக்குவதே அதிமுகவின் ஒட்டுமொத்த கொள்கை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, “திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. குடிகாரர்களாக பார்த்து திருந்தாவிட்டால் குடியை ஒழிக்க முடியாது. காலம் காலமாய் பழக்கப்பட்டு விட்டார்கள். மதுவை முதலில் கொண்டு வந்ததே திமுகதான். எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்ததும் தமிழ்நாட்டில் மதுவே கூடாது என உடனடியாக கையெழுத்திட்டார். ஆனால் கள்ளச்சாராயம் பெருகி இறப்பு அதிகரித்தது. இதனால் வேறு வழியில்லை என்ற அடிப்படையில் தான் மீண்டும் திறக்கப்பட்டது.
மது கூடாது என்பதே அரசின் நிலை. இதனால் தான் ஜெயலலிதா 500 மதுக்கடைகளை ஒழித்தார்கள். அந்தவழியில் தற்போது வந்த அரசு மதுக்கடைகளை ஒழித்து வருகிறது. ஆகவே படிப்படியாக மது இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதே அதிமுகவின் ஒட்டுமொத்த கொள்கை. அந்தக் காலம் வரவேண்டும் என்பதே அனைவரின் ஆசையும்கூட.
நாங்கள் யாரிடமும் வலுக்கட்டாயமாக மதுவை திணிக்கவில்லை. அதை நிறுத்தினால் என்ன விளைவுகள் வரும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.” எனத் தெரிவித்தார்.